ஆளுநர் ஆர் என் ரவியை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தில் அரசியல்
குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்வதாக குற்றம் சாட்டி விசிக சார்பில் ஆளுநர்
மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அமைந்துள்ள ராஜிவ் காந்தி சிலை
அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தை விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி நடத்தினார். விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் துணை பொது செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட நிர்வாகிகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்,
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் தேசிய அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்த
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆளுநருக்கு எதிரான கண்டன உரை நிகழ்த்தினர்.
போராட்டத்தின் போது மேடையில் பேசிய திருமாவளவன், ஆளுநரை தமிழகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை வைத்து போராடுவதும் மூலம் அது நிறைவேறிவிடுமா என பலர் என்ன கூடும் ஆனால், அவ்வாறு கோரிக்கை வைத்து போராடுவதால் ஆளுநரின் போக்கை மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என பேசினார்.
அத்துடன், ஆளுநரின் கொள்கை பின்னணி என்ன அவருக்கு பின் இருந்து யார் இயக்குவது என்பதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய தேவை உள்ளது. அண்ணாமலை போல் ஆளுநர் ரவி ஐ பி எஸ் அதிகாரியாக இருந்தவர், குறிப்பாக உளவு துறை அதிகாரியாக இருந்தவர். உளவு துறை அதிகாரிகள் மக்களுக்கும் அரசுக்கும் இடையே குழப்பத்தை
ஏற்படுத்துவார்கள், வன்முறையை தூண்டுவார்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து
அவர்கள் நினைப்பதை சாதிப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும், இது போன்ற வேலைகளை அரசு அவர்களுக்கு வழங்கும் அதனால் தான் ஆர் என் ரவி ஓய்வு பெற்ற பின் நாகாலாந்திற்கு அனுப்பப்பட்டார். ஆளுநர் ஆர் என் ரவி ஜமகாளத்தில் வடிக்கட்டப்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர் வடிகட்டிய சனாதனவாதி என கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன், முன்பு சனாதன கொள்கைகளை பெரிதாக பேசியவர் தற்போது, ஆளும் திமுகவிற்கு எதிராக நேரடியாக மோதுவது என துணிந்து முடிவெடுத்து விட்டார். அதனால் தமிழ்நாடா தமிழகமா என கேள்வி எழுப்பி தமிழகம் என சொல்வதே சரி என பேசியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களவை மாநிலங்களவையில்
ஏற்றுக்கொள்ளப்பட்டு அழைக்கப்பட்டு வருகிறது. அரசியல் அமைப்பு சட்டப்படி
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு ஏற்ப சில
முடிவுகளை ஆளுநர் எடுக்கலாம் அமைச்சரவை தயாரித்து தரும் உரையை அவர்
படிக்கலாம். ஆனால் ஆளுநர்கள் தான் தோன்றி தனமாக செயல்படுகிறார்கள். தற்போதுள்ள ஆளுநர் ரவி மட்டுமல்ல முன்புபிருந்த ஆளுநர்கள் பண்வாரிலால் புரோகித், சென்னா ரெட்டி உள்ளிட்டோரும் அவ்வாறு செயல்பட்டதுண்டு என பேசினார்.
மேலும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தான் தோன்றி தனமாக
செயல்பட்டுள்ளனர்.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஆளுநர்கள் மாநில அரசுகளோடு
முரண்பட்டதற்கு நிர்வாக சிக்கல் காரணம். ஆனால் பாஜக ஆட்சியில் ஆளுநர்கள் மாநில
அரசுகளோடு முரண்படுவதற்கு கொள்கை சிக்கல் காரணம் என விளக்கம் அளித்தார்.
அத்துடன், திமுக தூண்டிவிட்டு தான் நாங்கள்போராடுவதாக ஒரு சிலர் அறியாமையில்
பேசுகிறார்கள். இது திரிபுவாதம். திமுகவை பொறுத்தவரை அடுத்த நாளே சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆளுநரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டது. ஆனால் விசிக முற்றுகை போராட்டம் நடத்துகிறோம், திரும்பி போ என உறுதியாக சொல்கிறோம் என விளக்கம் அளித்தார்.
மேலும், ஆளுநருடன் விசிக முரண்படுவதற்கு கொள்கை ரீதியான பிரச்னை தான் காரணம். தீவிர சனாதன சக்திகளை தேடி பிடித்து பாஜக ஆளாத மாநிலத்தில் ஆளுநர்களாக போட்டு, குழப்பத்தை ஏற்படுத்தி நிர்வாக தேகத்தை உண்டு பண்ணுவதாக குற்றச்சாட்டினார். ஆளுநர் ஆர் என் ரவியை அழைக்காமல் அடுத்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
அத்துடன், திமுக எதிர்ப்பாளர்கள் சிலர் விசிக திமுக, திராவிட அரசுக்கு முட்டு கொடுப்பதாக விமர்சிக்கிறார்கள். திமுக, அதிமுக தொடங்குவதற்கு முன்பு திராவிடர் கழகத்தை பெரியார் ஏற்படுத்துவதற்கு முன்பு திராவிடம் என்ற சொல்லை தமிழ்நாட்டில்
பயன்படுத்தியவர்கள் அயோதிதாச பண்டிதர்,ரெட்டை மலை சீனிவாசன் உள்ளிட்டோர்.
அவர்கள் ஆரியத்திற்கு எதிராக திராவிடத்தை முன்வைத்தனர். திராவிட சொல்லை, கொள்கையை நேர் பகையாக சொல்லும் கும்பல் தான் ஆர் எஸ் எஸ் கும்பல், அவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள் என்றால், திமுகவை மட்டும் எதிர்க்கிறார்கள் என பொருள் அல்ல என பேசினார்.
நாம் இவ்வளவு நாள் வளர்த்து வந்த சமூக நிதி அரசியலையே குழி தோண்டி புதைக்க பார்க்கிறார்கள் என்று தான் பொருள். இதை புரிந்து கொள்ளாதவன் அரசியல் மக்கு என்று பொருள். திராவிட அரசியலை எதிர்ப்பது என்பது அம்பேத்கரை எதிர்ப்பது என்று பொருள்
பெரியாரிய மார்க்சிய அரசியலை எதிர்ப்பதாக பொருள். சமூக நீதியை பலவீனப்படுத்தினால் தான் மத வெறி அரசியலை தூண்ட முடியும். சனாதன
தர்மத்தை நிலை நிறுத்த முடியும் இதை எதிர்த்து தான் விசிக போராடுவதாக கூறினார்.
இதையடுத்து திருமாவளவன் தலைமையில் விசிகவை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆளுநர் மாளிகை நோக்கி முற்றுகையிட பேரணியாக சென்றனர். அதற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து தடுப்பு வேலைகளை அமைத்து தடுத்து நிறுத்தினார். தடையை மீறி ஆளுநர் மாளிகை முற்றுகை இட சென்றதால் திருமாவளவன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும்
மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நந்தனம் ஓய் எம் சி ஏ மைதானத்தில் உள்ள அரங்கில் தங்க வைக்கப்பட்டனர்.