2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அணைகள் அதன் அசல் நீர் சேமிப்பு திறனில் 26 சதவீதத்தை இழக்க நேரிடும் என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உலகளவில் உள்ள அணைகளின் நீர் சேமிப்பு திறன் 25 சதவீதம் குறையும் என ஐநா குறிப்பிட்டுள்ளது.
நீர், சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலம் ஆகியவற்றுக்கான ஐநா பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் உள்ள அணைகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சுமார் 150 நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த அணைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் மூலம் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலகளவில் பெரும்பாலான அணைகள் வண்டல் குவிப்பு காரணமாக ஏற்கெனவே அதன் அசல் கொள்ளளவில் 13 முதல் 19 சதவீதத்தை இழந்துவிட்டதாகவும் வரும் 2050ம் ஆண்டுக்குள் 25 சதவீதம் வரை இழக்கக்கூடும் என்று இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. உலகின் அதிக அணைகளை கொண்ட சீனாவில் அணைகளின் நீர் சேமிப்பு திறன் ஏற்கெனவே 10 சதவீதம் குறைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை 3700 பெரிய அணைகள் 2050ம் ஆண்டுக்குள் அவற்றின் ஆரம்ப கொள்ளளவில் இருந்து சராசரியாக 26 சதவீதத்தை இழக்க நேரிடும் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவை போலவே 2050ம் ஆண்டில் அமெரிக்கா 34 சதவீதமும், பிரேசில் 23 சதவீதமும் சீனா 20 சதவீதமும் கொள்ளளவை இழக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து பெரேரா கூறுகையில், “ புதிதாக கட்டப்பட்டு வரும் அணைகள் வண்டல் படிவுக்கான சேமிப்பு இழப்பை ஈடு செய்யமுடியாது. குறைந்து வரும் சேமிப்பு திறன் 2050ம் ஆண்டுக்குள் பல சவால்களை உலக நாடுகளுக்கு அளிக்கப்போகிறது. குறிப்பாக நாட்டுடைய பொருளாதாரம், நீர் பாசனம், மின்சார உற்பத்தி, நீர் விநியோகம் ஆகியவற்றில் கண்டிப்பாக பல சவால்களை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார்.







