தாய் மொழி கல்வியை தரமாக வழங்கவே புதிய கல்வி கொள்கை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஜி20 இளம் தூதுவர் உச்சி மாநாடு 2023 “உலக இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தூண்டுகோல்” என்ற
தலைப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஜி20 ஷெர்பா அமிதாப்
காந்த், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ரவி ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவர்களுக்கான கூட்டு கல்வி முறை என்ற தலைப்பிலும், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் தொழில் முனைவு என்ற தலைப்பிலும் இளம் தூதுவர்கள் கலந்துரையாடுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்ததாவது..
”இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் தான். இவர்களை முன்னேற்ற பாதைக்கு
அழைத்து செல்லும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த ஜி20 இளைஞர் தூதுவர்
மாநாடு கோவையில் நடப்பது கோவைக்கே பெருமையான விஷயம். இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. தொழில்நுட்பத்தில் இந்தியா பெரிதும் முன்னேறி வருகிறது.
பிரதமர் மோடியில் ஆட்சியில் அதிகளவில் இளைஞர்களுக்கு உதவும் வகையில் உள்ளது. தாய் மொழி கல்வியை தரமான வழங்க வேண்டும் என்பதே புதிய கல்வி கொள்கையின் தாரக மந்திரம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் காந்த் தெரிவித்ததாவது..
“100 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு இழந்து வருகின்றனர்.75 நாடுகள் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வருகிறது. பொருளாதார ரீதியான பாதிப்பும் உள்ளது. இதுபோல் உலகளவில் பிரச்சினை இருந்து வரும் நிலையில் இந்தியா ஜி20 மாநாட்டிற்கு தலைமை ஏற்றுள்ளது. ஜி20 தொடர்பாக 59 நகரங்களில் 220 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
உலக அளவில் இந்தியா டேட்டா பயன்பாட்டிலும், மொபைல் பயன்பாட்டிலும் முதலிடம் வகிக்கிறது எனதெரிவித்தவர். கழிவறை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி போன்றவை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. 500 மில்லியன் மக்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் அளிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் பெண்கள் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். 80 சதவீதம் பெண்கள் வங்கி கணக்கு வைத்துள்ள நிலையை எட்டியுள்ளோம். ஜி20 பற்றி அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார் என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று
பேசியதாவது..
தமிழ்நாடு, தமிழ் கலாச்சாரம், மக்கள், நாகரிகம் ஆகியவை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இங்கு ஏராளமான புலவர்கள், தத்துவ அறிஞர்கள் உள்ளனர். குறிப்பாக திருவள்ளுவரின் திருக்குறள் என்பது மக்களுக்கு, பல்வேறு கலாச்சாரங்களை கற்று கொடுக்கிறது. அதேபோல் சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம், புறநானூறு போல இலக்கியங்களும் நமது கலாசாரங்களை எடுத்துகூறுகிறது.
காலநிலை மாற்றத்தால் இயற்கை மனித மோதல் நடந்துவருகிறது, தாய் பூமி வெப்பமயமாகி வருகிறது.நதிகள் வறண்டு, வனங்கள் காய்ந்து என பல்வேறு மோதல்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான போர் நடந்து வருகிறது. புதிய புதிய எலக்ட்ரானிக்
உபகரணங்களால் மனிதர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடக்கிறது.
குறிப்பாக மன உளைச்சல் அதிகளவில் காணப்படுகிறது. எப்போது அமைதியான ஆரோக்கியமான உலகை உருவாக்க போகிறோம் என்பதை நாம் நினைத்து பார்க்க
வேண்டும் . என ஆளுநர் ரவி தெரிவித்தார்.
– யாழன்







