தஞ்சையில் சோழர்களின் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் மேம்பாட்டுதுறை, சுற்றுச்சூழல் மேம்பாடு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.
இதில் முக்கிய அறிவிப்பாக, தஞ்சையில் சோழர்கள் ஆட்சியை எடுத்துரைக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பேரரசுகளில் மிகவும் பழமையானது சோழப் பேரரசு. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆட்சி புரிந்த ராஜராஜன் மற்றும் அவரது மகன் ராஜேந்திர சோழன் ஆகியோர் சோழப் பேரரசை இந்தியாவின் வடபகுதியில் மட்டுமின்றி கடல் தாண்டியும் சென்று பேரரசை விரிவாக்கம் செய்து ஆட்சி புரிந்து வந்தனர்.
அப்போது தமிழ்நாட்டில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற அழியா புகழ்பெற்ற கோயில்களையும், விவசாயத்தை இன்று வரை காத்து நிற்க பேருதவியாக இருக்கும் திருச்சி கல்லணை ஆகியவற்றை கட்டி, ஆயிரம் ,2 ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோழர்களின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றி வருகின்றனர்.
இப்பேற்பட்ட சோழர்களின் ஆட்சியை எடுத்துரைக்கும் வண்ணம் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்திருப்பது போற்றுதலுக்குரியது என்று பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள், பொதுமக்கள் ஆய்வாளர்கள் என பலருக்கும் பயணப் பெறுவார்கள்.
அந்த அருங்காட்சியகத்தில் சோழர் காலத்து செப்பேடுகள், திருமேனிகள், சிற்பங்கள், ஓவியங்கள் கல்வெட்டுக்கள் என பல்வேறு ரூபங்களில் நமக்கு என்னென்ன சோழர் காலத்தில் உள்ள பொருள்கள் கிடைத்தனவோ, அவை எல்லாவற்றையும் அங்கு இடம் பெற செய்தால் உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ள முடியும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா