திரைப்படத்திற்கென பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா?… வாருங்கள் பார்க்கலாம்…
1960ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை கண்ணதாசனின் காலமாகத்தான் விளங்கியது. ஆனால் அவர் பாடல் எழுதத் தொடங்கிய காலத்தில் உடுமலை நாராயணகவிதான் திரையுலக கவிச்சக்கரவர்த்தியாக திகழ்ந்தார். அவரால் மட்டும்தான் நன்றாக எழுத முடியுமா என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை ஆரம்ப காலத்திலேயே கண்ணதாசனுக்கு இருந்தது. கள்வனின் காதலி திரைப்படத்தில் சில பாடல்கள் எழுதி விட்டு கலைஞரின் பராசக்தி திரைப்படத்தில் பாடல் எழுத வந்தார் கண்ணதாசன். பாட்டெழுத வாய்ப்பு கோரி வந்தவரை பராசக்தியின் பரபரப்பான கடைசி காட்சியான நீதிமன்ற காட்சியில், நீதிபதியின் அங்கியை மாட்டி நடிகராக உட்கார வைத்துவிட்டார்கள்.
கண்ணதாசன் கதை வசனம் எழுதி 1957-ல் வெளிவந்த மதுரை வீரன் திரைப்படத்தில் அவருக்கு 2 பாடல்கள் எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. எம்ஜிஆருக்கு கொள்கை பாடல்கள் எழுதுவதற்கு என ஒரு கவிஞர் பட்டாளம் உருவாகும் முன்பே கண்ணதாசன் பாடல்கள் எழுதினார்.
’கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே’ என பாடல் எழுதினார். ’பேசுவது கிளியா’ என்ற பாடலில் சேரனுக்கு உறவா என்ற வார்த்தைகளை கேட்டு எம்ஜிஆர் மலையாளி என சொல்லாமல் சொல்கிறாரா கவிஞர் என கேள்வி எழுந்தது. காதல் பாட்டெழுதிய அதே காலத்தில் மன்னாதி மன்னனில் ’அச்சம் என்பது மடமையடா’ என புரட்சிப் பாடலையும் எழுதினார் கவியரசர்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கப்பலில் பாடப்படும் பாடலை பல கவிஞர்கள் எழுதினார்கள். எம்ஜிஆருக்கு எந்தப்பாடலும் திருப்தி அளிக்காததால் கடைசியில் கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டார். எம்ஜிஆரின் எண்ணமறிந்த கவிஞர் எழுதிய பாடல்தான் ’அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்ற பாடல். வானையும், மண்ணையும் பாடலில் ஒன்றிணைத்து எழுதினார். சுதந்திரம் பறிக்கப்பட்ட பல நாட்டு மக்களின் விடுதலைக்காக, ’அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை’ என்ற வரிகள் எளிமையாக கம்பீரமாக ஒலிக்கின்றன.
எட்டாவது படித்துவிட்டு சிறுகூடல்பட்டியில் இருந்து மழலை மாறாமல் வந்த முத்தையா என்ற கண்ணதாசனுக்கு தமிழும் இசையும் காத்திருந்தன. அவரது பாடல்கள் காலத்தால் அழியாமல் நிரந்தரமாக நினைவு கூர வைக்கின்றன.









