மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மதுரை அருகே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கோயிலை முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதிமுகவின் இருபெரும் தலைவர்களாக விளங்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு, அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் முயற்சியால், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் கோயில் கட்டப்பட்டுள்ளது. 12 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில், 7 அடி உயரம் மற்றும் 400 கிலோ எடையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா கோயில் திறப்பு விழாவில் நலிவுற்ற அதிமுக தொண்டர்கள் 234 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி மற்றும் வெள்ளி குத்துவிளக்கு வழங்கப்பட்டது. கோயில் திறப்பு விழாவில் மூத்த அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, கோயில் திறக்கப்படுவதையொட்டி 21 சிவாச்சாரியார்களுடன் யாகசாலை பூஜை நடைபெற்றது.
இதையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் சத்துணவு திட்டம் கொண்டுவந்து சரித்திரம் படைத்தவர் எம்ஜிஆர் என புகழாரம் சூட்டினார். இதேபோல் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா என புகழ்ந்துரைத்த முதலமைச்சர், 2021-ல் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் புகழுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக கோயில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் மக்கள் மனதில் குடிகொண்டுள்ளதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். விழாவின் இறுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெள்ளி வேலை பரிசாக அளித்தார்.







