” சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம்” – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்…..!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், நமது நோக்கங்கள் சில நேரங்களில் தவறாகப் புரிந்துக்கொள்ள படலாம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரகுமான்.  பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சாவா என்னும் இந்தி படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் அளித்த நேர்காணல் ஒன்றில் ”சாவா திரைப்படம் பிரிவினையை தூண்டும் விதமாக இருக்கிறது. ஆனால், அதன் உள்ளடக்கம் தைரியத்தைக் காட்டுவதாக இருப்பதால் அந்தப் படத்துக்கு இசையமைத்தேன். கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம்” எனக் கூறினார்.

ஏ.ஆர். ரகுமானின் இந்த கருத்து இணையதளத்தில் பேசு பொருளானது. மேலும் நடிகயும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தும் ஏ.ஆர். ரகுமானின் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அருமையான நண்பர்களே இசை என்பது எப்போதும் என்னுடைய தொடர்பு மொழியாகவும் இந்தியாவின் கலாசாரத்தைக் கொண்டாடவும் கௌரவிக்கும் விதமாகவும் இருக்கிறது.

இந்தியா எனது முன்மாதிரி, எனது ஆசிரியர், எனது வீடு. சில நேரங்களில் நமது நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். ஆனால், என்னுடைய குறிக்கோள் எல்லாம் எப்போதும் இசை வழியாக கலாசாரத்தை உயர்த்துவதும் கொண்டாடுவதுமே ஆகும். எப்போதுமே பிறர் வருந்த வேண்டுமென நினைக்க மாட்டேன். என்னுடைய நேர்மை உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்.

இந்தியனாக இருக்க பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில், பல கலாசாரங்களை உள்ளடக்கிய குரலை கொண்டாடவும் கருத்து சுதந்திரத்திற்கும் இந்தியாவில் எப்போதும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பிரதமர் முன்னிலையில் வேவ்ஸ் கூட்டமைப்பில் நாகா இசைக்கலைஞர்களுடன் ரோஹி – இ – நூர், ஸ்டிரிங் கலைக்குழு, சன்சைன் குழு, சீக்ரெட் மவுன்டெயின் குழுவுடனும் இணைந்து நிகழ்ச்சி நடத்தினோம்.

இந்தியாவின் முதல் பலவிதமான கலாசாரத்தில் இருந்த இசைக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி அது. அத்துடன் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ராமாயணா திரைப்படத்துக்கு இசையமைக்கிறேன். ஒவ்வொரு பயணமும் என் குறிக்கோளை வலுப்படுத்துகிறது. ஜெய்ஜிந்த், ஜெய் ஹோ” என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.