”உங்களை விட வெறுப்பு கொண்ட ஒருவரை நான் பார்த்ததில்லை” – ஏ.ஆர். ரகுமானை விமர்சித்த கங்கனா ரனாவத்…!

நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் தனது எமர்ஜென்சி திரைப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் விரும்பவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர். ரகுமான். இவர் தமிழ்,தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அண்மையில் ஏ.ஆர். ரகுமான் சாவா என்னும் இந்தி படத்திற்கு இசையமைத்திருந்தார். சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் லக்ஸ்மன் உடேகர் இயக்கியிருந்த இப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது.

இந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான் அளித்த நேர்காணல் ஒன்றில் ”சாவா திரைப்படம் பிரிவினையை தூண்டும் விதமாக இருக்கிறது. ஆனால், அதன் உள்ளடக்கம் தைரியத்தைக் காட்டுவதாக இருப்பதால் அந்தப் படத்துக்கு இசையமைத்தேன். கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம்” எனக் கூறினார்.

ஏ.ஆர் ரகுமானின் இந்த கருத்தை நடிகையும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்திருப்பதாவது, “அன்புள்ள ரகுமான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் நான் முன்முடிவோடு அணுகப்படுவதையும், நிறைய பாரபட்சத்தையும் எதிர்கொள்கிறேன். ஆனால், உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் இயக்கிய எமர்ஜென்சி படத்தின் கதையை உங்களுக்கு சொல்ல விரும்பினேன். ஆனால் கதை கேட்பதை விடுங்கள். என்னை சந்திக்க கூட நீங்கள் மறுத்தீர்கள். பிரசார திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால்,எமர்ஜென்சி ஒரு தலைசிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள்.

இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட நான் படத்தை அணுகி இருந்த விதத்தை பாராட்டி எனக்கு கடிதங்களை அனுப்பினர். ஆனால் உங்கள் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்தது. உங்களுக்காக நான் வருந்துகிறேன்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.