‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தல் விடுப்பதா? – பாஜகவிற்கு சீமான் கண்டனம்

பிரதமர் மோடி குறித்து ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பேசியதால் அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நடக்கும் சிறுவர்கள் கலந்துக்கொள்ளும்…

பிரதமர் மோடி குறித்து ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பேசியதால் அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நடக்கும் சிறுவர்கள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் செய்த முக்கிய விசயங்கள் குறித்து 2 சிறுவர்கள் ஜாடையாக கேலி செய்து பேசியது மத்திய அரசில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. மாநில தலைவர் அண்ணாமலை கோவை செல்வபுரம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, பாரத பிரதமரை தாழ்த்தி பேசி, அந்த பதிவை வெளியிட்டது கண்டனத்திற்குரியது எனவும், இதற்காக அனைவரும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறியிருந்தார். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருந்தார்.

பாஜகவின் இந்த செயல்பாட்டிற்கு எதிராக ‘தனிமனித கருத்து சுதந்திரத்தை பரிப்பதா’ என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/NaamTamilarOrg/status/1483305939222548480

அந்த அறிக்கையில் கூறியதாவது,

”ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறுவர்கள் இருவர் மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு, பகடி செய்ததற்காக அத்தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாஜகவின் ஆட்சி குறித்து அந்நிகழ்ச்சியில் நேரடியாக விமர்சிக்கப்படாதபோதும் கூட அத்தொலைக்காட்சியின் மீது அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை ஏவிவிடத்துடிக்கும் பாஜகவின் செயல்பாடு கருத்துரிமை மீதானக் கோரத்தாக்குதலாகும்.

கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் போன்ற கருத்தாளர்களும், செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்படுவதும், ஆனந்த் டெல்டும்டே, வரவர ராவ், ஸ்டோன் சுவாமி போன்ற சமூகச்செயற்பாட்டாளர்கள் கொடுஞ்சட்டங்களின் மூலம் பிணைக்கப்படுவதும், ஊடகங்கள் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுவதுமான நிகழ்வுகள் நாட்டின் சனநாயகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஏழு ஆண்டுகால பாஜகவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கொடும் சட்டங்கள், பேரழிவுத்திட்டங்களின் விளைவினால் நாட்டு மக்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கையில், அதுகுறித்த அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்தவும் தடையிடுவார்களென்றால், நடப்பது மன்னராட்சியா? மக்களாட்சியா? எனும் கேள்வி எழுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கெதிரான மாபெரும் சனநாயகப்படுகொலை; கருத்துச்சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் அரசப்பயங்கரவாதம்.

இதனை ஒருபோதும் அனுமதிக்கவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது. அதிகாரப்பலம் கொண்டு ஊடகங்களை அடக்கியாள முற்படும் பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன்,” என அவர் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.