மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் விவகாரம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற…

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு, நீதிபதி மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தூய்மைப் பணியாளர்கள் உரிய உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்துள்ள புகைப்படங்கள் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். இந்த புகைப்படங்கள் குறித்த தகவல் உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்படும் என்றும் மனுதாரர் சமர்பித்த புகைப்படங்களில் தவறு இருக்கும் பட்சத்தில் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மனிதர்கள் கைகளால் சாக்கடைகள், குப்பைகள் போன்றவற்றை சுத்தம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அலட்சியம் காட்டுகின்றனர் என்றும், தூய்மைப் பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் முழுமையான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு, மனிதர்களைக் கொண்டு மலம் அள்ளுதல், பாதாள சாக்கடை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளாமல், ரோபோட் மற்றும் நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.