விமர்சனம்: எப்படி உள்ளது நானே வருவேன்?

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் நானே வருவேன். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ், செல்வராகவன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளனர். குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவும்…

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள படம் நானே வருவேன். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ், செல்வராகவன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளனர். குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவும் இணைந்தது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதுவரை வெளிவந்துள்ள படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்படி பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நானே வருவேன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் ஓரளவுக்கு பூர்த்தியானது என்று தான் சொல்ல வேண்டும்.

கொடி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இந்துஜா மற்றும் எல்லி அவரம் நடித்துள்ளனர். யோகிபாபு மற்றும் பிரபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் இயக்குனர் செல்வராகவன் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ட்வின்ஸ் சகோதர்களான தனுஷ் ஒருவர் ( பிரபு ) அமைதியான சாதுவாகவும் மற்றொருவர் ( கதிர் ) சற்று வித்தியாசமாகவும், சைக்கோவாகவும் இருப்பார். கதிர் சிறு வயதிலேயே அதிக தொல்லை கொடுப்பவராக இருந்ததால் அவரது தந்தை அவரை கண்டிப்பார். ஒரு கட்டத்தில் கதிர் தனது தந்தையை கொன்று விடுகிறார். இதனால் அவரது அம்மா அவரை தனியாக விட்டு விட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.

இருபது ஆண்டுகளுக்கு பிறகு மற்றொரு தனுஷ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அமைதியாக வாழ்ந்து வருவார். இப்படி இருக்கும் சூழலில் தனுஷின் மகள் வித்தியாசமாக நடந்து கொள்வார். இதனால் மன உளைச்சளுக்கு ஆளாகும் தனுஷ் இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்வார். பின்னர் என்ன ஆனது என்பது தான் நானே வருவேன் படத்தின் கதை.

முதல் பாதி ஹாரர் கலந்த காட்சிகளுடன் ஹாலிவுட் படத்தை ஒப்பிடும் அளவுக்கு கொண்டு சென்ற செல்வராகவன் இரண்டாம் பாதியில் அதை பூர்த்தி செய்யாமல் வெறும் பழிவாங்கும் கதையாக நிறைவு செய்துள்ளார். அடுத்து என்ன ஆகும், எப்படி திரைக்கதை நகரும் என முதல் பாதி எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இரண்டாம் பாதியில் பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக கிளைமாக்சில் இரண்டு தனுஷும் மோதிக்கொள்ளும் காட்சிகள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் இதுவரை வெளியான செல்வராகவன் படங்களில் இல்லாதது போல் இருந்தது.

யுவனின் பின்னணி இசை தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. குறிப்பாக வீரா சூரா, ரெண்டு ராஜா பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை ஏற்கனவே பெற்றுள்ளன. சைக்கோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தனுஷ் வரும் காட்சிகளின் பின்னணி இசை மிகப்பெரிய பிளஸ். அதே போல ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு ஹாலிவுட் படத்தை ஒப்பிடும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக இருந்தது.

நாயகியாக நடித்துள்ள இந்துஜா தொடக்கம் முதல் இறுதி வரை தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். மற்றொரு நாயகியாக நடித்துள்ள எல்லி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகிபாபு மற்றும் பிரபு இருவரும் ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் சொல்லும் அளவிற்கு அவர்களது கதாப்பாத்திரம் இருந்தது. சத்யா என்னும் கதாப்பாத்திரத்தில் தனுஷ் மகளாக நடித்துள்ள சிறுமி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட்சிக்கு காட்சி இயக்குனர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு நம்மிடம் பாராட்டை பெற்றுள்ளார்.

இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது படத்தின் நீளம் தான். 2 மணி நேரத்தில் சொல்ல வந்த கதையை ஓரளவுக்கு புரிய வைத்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். அதிலும் நானே வருவேன் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்புள்ளது என்பதையும் படத்தின் இறுதியில் சொல்லி விட்டு சென்றுள்ளார் செல்வ ராகவன். மொத்ததில் பெரிய சொதப்பல் இல்லை என்பதால் திரையரங்கில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.