முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு : ஆக.7ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் விவகாரத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா, கடந்த டிசம்பர் 2025-ல் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “1999-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் 2021-ஆம் ஆண்டு முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக” குறிப்பிட்டிருந்தார். மேலும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து வசிக்க தமக்கு உரிமை வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் சங்கீதா இடைக்கால மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பிரசாரம் மற்றும் அரசியல் பணிகளின் காரணமாக நேரில் ஆஜராக முடியவில்லை என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கு விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்னிலையில் நடைபெற்றது.

இன்றைய விசாரணையின் போது முதலமைச்சர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரி இருந்தார். ஆனால் இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.