கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால்
மாவட்ட ஆவின் தலைமை அலுவலகத்தை முகவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு பால்வளத்துறையின் சார்பில் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பால்,தயிர் உள்ளிட்ட ஏராளமான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆவின் வாடிக்கையாளர்களின் பால் தேவை 30 ஆயிரம் லிட்டர் என்றபோதிலும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 5 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
திண்டுக்கல், ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் சுமார் 15 ஆயிரம் லிட்டர் பால் இறக்குமதி செய்யப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான ஆவின் பால் தட்டுபாடு நிலவுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் பால் வாங்க சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மற்ற தனியார் பால் நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஆவினின் பால் பொருட்கள் விலை குறைவாக இருப்பதால் நடுத்தர வர்க்க பொதுமக்கள் ஆவினையே நம்பி உள்ளனர்.
ஆனால் அரசு விற்பனையை பெருக்குவதில் கவனம் செலுத்தாமல் மெத்தனப்போக்கை காட்டி வருவதாக குற்றம்சாட்டிய ஆவின் முகவர்கள் நாகர்கோவிலில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு வந்து அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
—-வேந்தன்