அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, எந்தவொரு அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதனை ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சரின் ரீல்ஸ் வெறி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறப்பதற்கும், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு என்ற பெயரில் அங்குப் பணியிலிருந்த காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார்?
நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ் என ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்திலிருக்கும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட தவெகவில் உள்ள நிர்வாகிகளின் இதுபோன்ற செயல்பாடுகள், ரீல்ஸ் மோகம் அக்கட்சியினரின் ரத்தத்திலேயே எந்த அளவிற்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் வரை அதிகார வரம்பை மீறிப் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறிய அக்கட்சித் தலைமையின் அலட்சியத்தால் தான் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி, தண்ணீரைத் திறந்துவிடும் அளவிற்கான பொறுப்பற்ற செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.
எனவே, அரசு நிர்வாகம் என்பது அவரவர் நினைத்ததைச் செய்யும் சினிமா படப்பிடிப்புத் தளமல்ல என்பதையும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சமூக வலைதளங்களில் புகழ் தேடுவதற்கான மேடைகள் அல்ல என்பதையும் உணர்ந்து, இதுபோன்ற தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




