“காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பொய் பிரசாரம்!” – துரை வைகோ குற்றச்சாட்டு

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் திரித்துப் பேசி கர்நாடக முதல்வர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது..

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பொய் பிரசாரம்!

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பையே திரித்துப் பேசி கர்நாடக முதலமைச்சர் பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகிறார் என்றார். பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே கர்நாடக முதலமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனைத் தமிழக பாஜகவினரும் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்தார்

தமிழக அரசு கர்நாடக அரசைக் கண்டித்து சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும். நீர் மேலாண்மை அமைப்பு வழங்கிய தகவல்களைக்கூட கர்நாடக அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றார்.

தவறு செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை!

யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திலும் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. அதேபோல், தமிழகத்திலும் தவறு செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மறைமுகக் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது!

சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகக் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தார். ஆறு மாதங்களைக் கடந்தும் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 40 கோடி ரூபாய் தொடர்பாகப் பேரம் பேசப்பட்டதாகவும், மறைமுகக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர் அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியரும் இதுதொடர்பாகப் புகார் அளித்ததாகத் தெரியவில்லை. ஆனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்புடையதல்ல என்றார்.

நூலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு!

நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலேயே மிகப்பெரிய முறைகேடுகளில் ஒன்றாக இந்தப் புத்தகக் கொள்முதல் முறைகேடு அமைந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார். மேலும், ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையே, ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக துரை வைகோ கருத்துத் தெரிவித்து வந்தபோது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் அவருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.