அதானி விவகாரத்தால் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றிருந்தார். அங்கு கருத்தரங்கில் பேசிய ராகுல் காந்தி , இந்திய ஜனநாயகம் அழுத்தம் மற்றும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்தார். இந்திய ஜனநாயக அமைப்புகள் முழுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அவரது இந்த பேச்சு வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை அவதூறகாக பேசும் செயல் என்றும், வெளிநாடுகளின் தலையீட்டை நாடுவதாகவும் விமர்சித்த பாஜக, இதற்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று காலை மக்களவை சபாநாயகரிடம் சென்று நான் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் என் தரப்பு நியாயத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பது என் உரிமை. நாடாளுமன்றத்தில் நான் பேச அனுமதிக்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன்.
அண்மைச் செய்தி :நாடாளுமன்றத்தை அதிர வைத்த அதானி விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்!
சில நாட்களுக்கு முன்பு அதானி குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் நான் நாடாளுமன்றத்தில் நான் பேசியிருந்தேன். அது நீக்கப்பட்டுவிட்டது. அதானி விவகாரம் குறித்து அரசாங்கமும் பிரதமர் மோடியும் அச்சப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் பிரச்னையாக்குகிறார்கள். என்னுடைய பிரதானமான கேள்வி மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதே?. இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.







