இசைஞானி இளையராஜா ஆஸ்கர் விருது வாங்கித்தான் தன் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை, அவர் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் விருது என நடிகர் விமல் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாண்டிராஜின் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விமல், களவாணி, தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்குள் ஒருவராக வலம் வருபவர். தற்போதும் படங்களில் நடித்து வரும் இவர், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
அண்மையில் நடிகர் விமல் நடித்து வெளியான விலங்கு வெப் சீரிஸ் வெற்றி பெற்றதால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலிற்கு நடிகர் விமல், குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று சென்றிருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்த அவர், கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கபப்ட்ட பிரசாதங்களை பெற்றுக்கொண்டார். பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற தமிழ் ஆவண குறும்படத்திற்கும், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கும் உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆஸ்கர் விருது, தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும் கூறினார்.
பின்னர் தமிழ் சினிமா குறித்தும், இசைஞானி இளையராஜா குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், வசூல் மற்றும் விருதுகளில் தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுவதாக நான் உணரவில்லை. கலைத்துறையை பொறுத்தவரை மொழி பாகுபாடு என்பது கிடையாது. எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் நன்றாக இருந்தால் வெற்றி அடைகிறது என்று தெரிவித்தார். மேலும் இசைஞானி இளையராஜா புறக்கணிக்கப்படுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இசைஞானி இளையராஜா ஒரு லெஜன்ட். ஆஸ்கர் விருது வாங்கித்தான் அவர் தன் திறமையை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர் தமிழ் சினிமாவிற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த ஆஸ்கர் என கூறினார்.
தொடர்ந்து தனது மனைவி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை தொகுதியில் தன் மனைவிக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தோம். ஆனால் கிடைக்கவில்லை. தற்போது அவர் மருத்துவ மேற்படிப்பை தொடர்வதால் , நாடாளுமன்ற தேர்தலில் சீட் கேட்க விரும்பவில்லை எனவும் விமல் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா










