அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
தவெக அரசை விமர்சித்த இபிஎஸ்!
“ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் ‘ரீல்ஸ்’; தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ‘ரீல்ஸ்’; ஆட்சிக்கு வந்த பிறகும் ‘ரீல்ஸ்’; என்று தலைவன் எவ்வழியோ, தொண்டன் அவ்வழி என்பதுபோல், தவெக தலைவர் விஜயின் வழியில் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று அனைவருமே ‘ரீல்ஸ்’ மோகத்தில் ஆழ்ந்து, மக்களின் அடிப்படை பிரச்சனைகளை திசை திருப்பும் ஒரு மோசமான ஆட்சியை தவெக கூட்டணி அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது.
பொதுவாக காவல்நிலையம் என்பது சட்டத்தை பாதுகாக்குமிடம். அமைச்சர்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் செய்து ஆய்வு செய்வதில்லை. ஆனால் தவெக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் முதலமைச்சர் துறையின்கீழ் வரும் தக்கோலம், அரக்கோணம் காவல் நிலையங்களை நள்ளிரவில் ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த பெண் காவலரை அழைத்து அவர்களது மொபைல் போனையும் ஆய்வு செய்ததாக ‘ரீல்ஸ்’ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார்.
அமைச்சர் காவல் நிலைய ஆய்வு குறித்து கேள்வி!
தவெக அமைச்சர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு ஆய்வுக்குச் சென்றாரா? அல்லது, யாரேனும் விசாரணை கைதியை சந்திக்கச் சென்றாரா? என்றும், காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களின் கைப்பேசியை எந்த நோக்கத்தில் ஆய்வு செய்தார்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ‘ரீல்ஸ் மோகத்தில்’ அமைச்சர்கள் காவல் நிலையங்களில் ஆய்வு செய்வது தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தும் செயலாகும்.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதல்வரைப் புகழ்ந்து பாடியதற்கு கண்டனம்!
அதேபோல் நேற்று திருச்செந்தூரில். லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து பயபக்தியுடன் கலந்துகொண்ட முருக பெருமானின் சூரசம்ஹார நிகழ்ச்சியில், முதல்வருக்கு ‘அரோகரா’, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு ‘அரோகரா’ என்று தமிழ் கடவுள் முருகப் பெருமானுடன் முதல்வரையும், அமைச்சரையும், ஒப்பிட்டு பாடிய வேல்முருகன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் பக்திமேடையை, அவர்களுக்கு பதவியளித்த கட்சித் தலைவரை துதிபாடும் மேடையாக மாற்றியதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகம விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். தவெக-வினர் பக்தி மேடைகளை ‘ரீல்ஸ்’ மோகத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




