நாடாளுமன்ற போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரத்துக்கான நிலைக்குழுவினர் திங்கள்கிழமை தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் எனப்படும் பெரிய கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இக்கோயிலை உலக அதிசயமாக அங்கீகரிக்கப் பரிந்துரைக்கப்படும் எனக் குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தாஜ்மஹாலை விடப் பெரிய அதிசயம்!
மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் குமார் ஜா தலைமையில் வந்த நாடாளுமன்றக் குழுவினர், மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழனால் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரிய கோயிலைப் பார்வையிட்டனர். அப்போது பேசிய சஞ்சய் குமார் ஜா, “பெரிய கோயில் ஒரு தேசிய அதிசயம். தாஜ்மஹாலை விடவும் மிகப்பெரிய அதிசயம். பெருவுடையார் கோயிலை உலக அதிசயமாக உயர்த்தி அங்கீகரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு நிச்சயமாகப் பரிந்துரைக்கும்” என்றார். மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், குறிப்பாக ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வருகை தருவதாகவும், அவர்களைக் கையாள்வதில் கூட்ட நெரிசல் மேலாண்மை சவாலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆய்வு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இந்த ஆய்வுக் குழுவில் மாநிலங்களவை உறுப்பினர்களான குஜராத்தைச் சேர்ந்த கேசரிதேவ்சிங் ஜாலா, தமிழகத்தைச் சேர்ந்த எஸ். கல்யாணசுந்தரம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கேஷ், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கோல்லா பாபுராவ் மற்றும் நியமன உறுப்பினர் சுதா மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். மக்களவை உறுப்பினர்களான உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரைச் சேர்ந்த பாபு சிங் குஷ்வாஹா, ஜான்சியைச் சேர்ந்த அனுராக் சர்மா, மகாராஷ்டிராவின் மும்பை தெற்குத் தொகுதியைச் சேர்ந்த அரவிந்த் கண்பத் சாவந்த் மற்றும் தமிழகத்தின் ஈரோடு தொகுதியைச் சேர்ந்த கே.இ. பிரகாஷ் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றிருந்தனர். பாரம்பரிய மங்கள வாத்தியங்கள் முழங்க நாடாளுமன்றக் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோயிலின் கட்டிடக்கலை, நுணுக்கமான சிற்பங்கள், பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்கள் மற்றும் பழங்காலக் கல்வெட்டுகளை உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கல்லணையிலும் ஆய்வு
இதனைத் தொடர்ந்து, கரிகால சோழனால் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்லணையையும் நாடாளுமன்றக் குழுவினர் பார்வையிட்டனர். அங்கு அதன் கட்டிட அமைப்பு, பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் குழுவினருக்கு விளக்கமளித்தனர்.
ஸ்ரீரங்கம் கோயிலிலும் ஆய்வு
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, இந்தியாவின் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் தமிழகத்தின் முக்கியப் பாரம்பரியச் சின்னங்களை முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சென்ற நாடாளுமன்றக் குழுவினர், அங்குள்ள கட்டிடக்கலைச் சிறப்புகளை ஆய்வு செய்தனர். குறிப்பாக, விஜயநகரப் பேரரசின் காலத்தில் (1336-1565) கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தையும் பார்வையிட்டனர்.





