இந்தியாவும் ஆசியான் அமைப்பும் இணைந்து உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. எனவே, இரு தரப்பினரின் பொதுவான எதிர்காலம் போட்டியின் அடிப்படையில் அல்லாமல், ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) உச்சி மாநாடு மற்றும் 21-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, “ஆசியான் அமைப்பின் ஒற்றுமை மற்றும் பிராந்தியத் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றார்.
அமைதி, ஸ்திரத்தன்மை அவசியம்
கடந்த சில ஆண்டுகளாக உலகம் தொடர்ச்சியான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. தற்போதைய சூழலில் உலகிற்கு மிகவும் தேவையானவை அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மைதான் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தச் சூழலில், ‘நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து வழிநடத்துதல்’ (Navigating Our Future, Together) என்ற இந்த ஆண்டின் மாநாட்டுக் கருப்பொருள் சிறப்புப் பொருள் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவும் ஆசியான் அமைப்பும் இணைந்து உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. எனவே, நமது எதிர்காலம் போட்டியால் அல்ல, ஒத்துழைப்பால் தீர்மானிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் மோடி கூறினார்.
இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் வலிமையும் உறுதியும் உள்ளன. இரு தரப்பினரும் இணைந்து இந்தப் பிராந்தியத்தை அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக மாற்ற முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா – ஆசியான் உறவு
இந்தியாவின் வளர்ச்சியும், ஆசியான் நாடுகளின் செழிப்பும் ஒன்றோடொன்று ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், ஆசியான் சமூகத்தின் தொலைநோக்குத் திட்டமான 2045 மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 ஆகியவை நமது பொதுவான இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் இரு தரப்பு கூட்டாண்மைக்கு புதிய உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது. இனி நமது பிராந்தியத்தின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா-ஆசியான் விரிவான உத்திசார் கூட்டாண்மையை அடுத்தகட்ட உயரத்திற்குக் கொண்டு செல்வதுடன், பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கும் இன்றைய கூட்டம் பங்களிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியான் தலைவர்களுடன் இந்த வடிவத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் 13-வது சந்திப்பு இதுவாகும்.
கூட்டாண்மைக்கு புதிய பரிமாணம்
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை’ (Act East Policy), இந்தியா-ஆசியான் உறவுகளுக்கு புதிய வேகத்தையும் ஆழத்தையும் அளித்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
இரு தரப்பு உறவு தற்போது பகிரப்பட்ட கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைத் தாண்டி, டிஜிட்டல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் புதிய பரிமாணங்களைப் பெற்று விரிவடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு இரு தரப்பு ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிரதமர், மக்களிடையேயான உறவை வலுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சுமார் 250 விரைவான தாக்கத் திட்டங்கள் (Quick Impact Projects) தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளில் 9 நாடுகளுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் மற்றும் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணங்கள் இரு தரப்பு நெருக்கத்தைப் பறைசாற்றுவதாகவும் கூறினார்.
ஆசியான் அமைப்பின் பின்னணி
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பு, அப்பிராந்தியத்தின் செல்வாக்குமிக்க அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இதன் பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளாக உள்ளன.
இந்தியா – ஆசியான் பேச்சுவார்த்தை உறவு 1992-ம் ஆண்டு துறைசார் கூட்டாண்மையுடன் தொடங்கியது. 1995 டிசம்பரில் முழுமையான பேச்சுவார்த்தைக் கூட்டாண்மையாகவும், 2002-ம் ஆண்டு உச்சி மாநாட்டுக் கூட்டாண்மையாகவும் உயர்ந்தது. 2012-ம் ஆண்டு இந்த உறவு உத்திசார் கூட்டாண்மையாகத் தரம் உயர்த்தப்பட்டது.
இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா மற்றும் திமோர்-லெஸ்தே ஆகிய 11 நாடுகள் ஆசியான் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – ஆசியான் உறவு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதில் இரு தரப்பும் கவனம் செலுத்தி வருகின்றன.
தற்போது ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பிலிப்பைன்ஸ், அதன் வருடாந்திர உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்களை மணிலாவில் நடத்தி வருகிறது.




