ஐபிஎல் – ஓய்வை அறிவித்தார் தோனி – சிஎஸ்கே-வின் ஆலோசகராக நியமனம்!

கிரிக்கெட் ஜாமபவான் எம்.எஸ் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து அணியின் ஆலோசகராக (Team Mentor) புதிய பொறுப்பை ஏற்க உள்ளார். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தோனி குறித்து சீனிவாசன் உறுக்கம்

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என்.சீனிவாசன் கூறுகையில், “எம்.எஸ்.தோனி இல்லாமல் சிஎஸ்கே அணி இல்லை. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வெற்றிகள், தோல்விகள் என அனைத்து சூழல்களிலும் நாங்கள் ஒன்றாகப் பயணித்து வளர்ந்துள்ளோம்.

எங்கள் உறவு இவ்வளவு வலுவாக இருப்பதற்கு ஒரே காரணம், ஒருவருக்கொருவர் நோக்கத்தின் மீது சந்தேகம் கொள்வதில்லை. அந்த நம்பிக்கையே இந்தப் பயணத்தைச் சாத்தியமாக்கியது.

2008-ம் ஆண்டில் தோனி சிஎஸ்கே அணியில் இடம்பெற வேண்டும் என நான் வலியுறுத்தினேன். அது நான் எடுத்த மிகச்சிறந்த முடிவாக அமைந்தது. அணிக்காக அவர் படைத்த சாதனைகளுக்காக மட்டுமல்ல; அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதற்காகவும் அவரை மதிக்கிறேன். தோனி எப்போதும் எங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாக இருப்பார். சிஎஸ்கே அணிதான் எப்போதும் அவரது வீடு” என்றார்.

தோனியின் அனுபவம் இளம் வீரர்களுக்கு உதவும்

சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் கூறுகையில், “எம்.எஸ்.தோனி போன்ற ஒரு வீரர் வாழ்நாளில் ஒருமுறைதான் கிடைப்பார். அணி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அவர் எங்களுடன் இருப்பதும், இந்த அணியின் அடித்தளத்தை உருவாக்கியதும் எங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.

தோனி சிஎஸ்கே அணியின் ஒரு ஜாம்பவான் என்பதைத் தாண்டி, களத்திலும் களத்திற்கு வெளியிலும் அவர் எங்களுக்காக அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. அவரது தலைமைத்துவம், எளிமை, அர்ப்பணிப்பு மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுடன் அவர் ஏற்படுத்திய பிணைப்பு ஆகியவை தனித்துவமானவை.

இனி சிஎஸ்கே குடும்பத்தில் ஆலோசகராக தோனி தொடர்ந்து பயணிப்பார். அணியில் பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த மாற்றத்திற்கான காலகட்டத்தில், அவரது அனுபவமும் வழிகாட்டுதலும் அடுத்த தலைமுறை சிஎஸ்கே வீரர்களை உருவாக்க உதவும்” என்றார்.

தோனியின் சாதனைகள்

சிஎஸ்கே அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.விஸ்வநாதன் கூறுகையில், “கிரிக்கெட் வீரராக தோனி படைத்த சாதனைகள் ஒவ்வொரு ரசிகரின் நினைவிலும் நிலைத்திருக்கும். ஆனால், அவர் சென்னையின் ஒருவராகவே மாறியதுதான் அவரை உண்மையிலேயே சிறப்பானவராக மாற்றியது. அவர் சென்னையைத் தனது ஊராக ஏற்றுக்கொண்டார்; சென்னையும் அவரைத் தன்னில் ஒருவராக ஏற்றுக்கொண்டது.

கோப்பைகள் மட்டுமல்ல, அவற்றை வென்ற விதமும் நினைவுகூரப்படும். அதுவே தோனியின் உண்மையான மரபு. மைதானத்தில் மஞ்சள் நிற உடையில் அவரைப் பார்க்க முடியாததை நாங்கள் இழப்போம். அதேநேரத்தில், எங்கள் வீரர்களுக்கு அவர் தொடர்ந்து வழிகாட்டுவார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

சிஎஸ்கே அணியின் சாதனை நாயகன்

தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன்கள் பட்டியலில் தோனி முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், அவரது தலைமையில் சிஎஸ்கே அணி 2 முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையையும் வென்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் தோனி திகழ்கிறார். சிஎஸ்கே அணிக்காக 5,314 ரன்களைக் குவித்து, அந்த அணியின் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மேலும், சிஎஸ்கே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும் உள்ளார். இதுவரை 272 போட்டிகளில் அவர் களமிறங்கியுள்ளார்.

கடைசி பந்தில் வெற்றியைத் தேடித்தரும் ஆட்டங்கள், ஹெலிகாப்டர் ஷாட்கள், இக்கட்டான நேரங்களிலும் பதற்றமின்றி செயல்படும் தன்மை, மின்னல் வேக ஸ்டம்பிங் மற்றும் வித்தியாசமான அணுகுமுறை என தோனி பல கோடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், 2027 ஐபிஎல் தொடரில் புதிய பொறுப்புடன் தோனி களமிறங்க உள்ளதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரவேற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.