தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையைப் பெற தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு துவங்க வேண்டுமென கூறிக் கட்டாயப்படுத்துவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அ.கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்
உள்ள ரேஷன் கடையில் தபால்துறை ஊழியர் ஒருவர் அங்குப் பொருட்கள்
வாங்க வரும் பெண்களிடம் தமிழக அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கான
உரிமைத் தொகையைப் பெறுவதற்கு தபால்நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டுமென கூறியுள்ளார்.
மேலும் அவர்களின் ஆதார் அட்டைய வாங்கி வலுக்கட்டாயமாகப் புதிய சேமிப்புக் கணக்கு துவங்குவதாகவும், வங்கிக்கணக்கில் இருப்பு வைக்க 200ரூபாய் பணம்
வசூலிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை விற்பனையாளரின் ஆதரவுடன், புதிய தபால் அலுவலக சேமிப்புகணக்கு துவங்கப்பட்டு, சேமிப்புக் கணக்கில் 149 ரூபாய் வரவு
வைக்கப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட நபரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது.
இருப்பினும் பெண்கள் வங்கிகளில் துவங்கப்பட்ட சேமிப்பு கணக்கு இருக்கும்பொழுது எதற்காகத் தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்குத் துவங்க கட்டாயப் படுத்த வேண்டும் என சந்தேகம் எழுந்தது. இதன்காரணமாக சிலர் தபால் துறை ஊழியர் மற்றும் ரேஷன்கடை விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறை வட்டாட்சியர் குழிவேலிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலேயே ரேஷன் கடைகளுக்கு வரும் பெண்களுக்கு தபால் நிலைய சேமிப்பு கணக்கு துவங்குவதாகத் தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கான மாதாந்திர உரிமைத்தொகைக்காக தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு துவங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
—-ரெ.வீரம்மாதேவி







