பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் பர்சை பறித்துவிட்டு தப்பியோடிய பெண்ணை, அந்த பெண்ணே துரத்தி சென்று பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரி. இவர் நேற்று தக்கலை பகுதியில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு வீடு திரும்புவதற்காக தக்கலை பேருந்து நிலையத்தில் நின்றிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் முகவரி விசாரிப்பது போல் சாந்தகுமாரியிடம் பேச்சு கொடுத்தவாறே அவரது கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். சுதாகரித்து கொண்ட சாந்தகுமாரி அந்த பெண்ணின் கையை தட்டி விட்ட நிலையில், சாந்தகுமாரி கையில் இருந்த பர்ஸை பறித்து கொண்டு மணலி என்ற பகுதியை நோக்கி தப்பியோடியுள்ளார்.
விரட்டி பிடிக்க சாந்தகுமாரி முயன்ற நிலையில் அந்த பெண் வேகமாக அங்கிருந்து சென்றுள்ளார். பின்பு சாந்தகுமாரி அடுத்ததாக வந்த பேருந்தில் ஏறி மணலி பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை திருடி திருடி என்று சத்தமிட்டவாறே விரட்டியுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அந்த பெண் பாலக்காடு பகுதியை சேர்ந்த 35-வயதான கவிதா என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் கவிதா சாந்தகுமாரியின் தாலி சங்கிலியை அறுக்க முயன்றதும், அது முடியாத நிலையில் பர்ஸை பறித்து சென்றதும் தெரியவந்தது.இதனையடுத்து சாந்தகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கவிதா மீது வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







