திமுக அரசை விமர்சிக்க யாருக்கும் அருகதை இல்லை என கோவை அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈச்சனாரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொண்டார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.86 கோடி ரூபாயில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது உட்பட ரூ.272.01 கோடி மதிப்பீட்டில் 229 முடிவுற்ற பயணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 588. 19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 10,7062 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 மாதங்களில் கோவை மாவட்டத்திற்கு 5வது முறை வந்துள்ளேன். இந்த மாவட்டத்தின் மீதும் மாவட்ட மக்களின் மீதும் நான் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு இது. எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதே உங்கள் முகங்களில் உள்ள மலர்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. கோவை என்றாலே பிரம்மாண்டம் தானே. தமிழகத்திற்கு ஏற்றுமதி இறக்குமதி குறியீடுகளை வழங்கக்கூடிய மாவட்டமாக கோவை விளங்கி வருகிறது. என்ன தொழில் தான் கோவையில் இல்லை” என்று பெருமிதம் தெரிவித்தார்.
என்ன செய்தோம் என கேட்பவர்களுக்கு இங்கு நான் நெஞ்சை நிமிர்த்து கம்பீரமாக கூறிக்கொள்கிறேன் என்ற முதலமைச்சர், “ஏதோ சிலருக்கு உதவிகளை செய்து கணக்கு காட்டுபவர்கள் நாங்கள் அல்ல” எனவும் கூறினார். கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க திட்டம் உள்ளிட்ட செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “திமுக கடந்து வந்த பாதை கடினமானது. தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்கள் நம் மாநிலத்தை கூர்ந்து கவனித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இங்கே இருக்கிற கூடிய சிலரால் இதைத் தாங்கி கொள்ள முடியவில்லை. மக்களோடு மக்களாக மக்களிடம் கேட்க வேண்டும். பேட்டிகொடுப்பதற்காக வீட்டைவெளியிட்டு பேட்டி கொடுத்து விட்டு வீட்டிற்குள் சென்று விடுபவர்களால் புரிந்து கொள்ள முடியாது” என்றார்.
தன்மானமில்லாத, இனமானம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் தான் திமுக அரசைப்பார்த்து கேள்விக்கு கேட்கின்றனர் என்ற அவர், “அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பிவிட்டு தான் வந்துள்ளேன். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை எல்லா தொகுதியிலும் விரிவுபடுத்த கூறியுள்ளேன். ஆட்சிக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கைகளில் ஆட்சிக்கு வந்த பிறகு பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன்” என்றார்.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் தேவையான திட்டங்களை பட்டியலிட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கலாம். அதில் உள்ள திட்டங்களில் முக்கிய திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பட்டியலை அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்
இந்த திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். இது எங்களது கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது கூட்டணிக் கட்சிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தான். ஆனால் அவர்கள் நன்றி சொல்லவோ பாராட்டவில்லையே என்று நினைக்க மாட்டேன். அதை எதிர்பார்த்து கடமை ஆற்றுபவன் இந்த ஸ்டாலின் அல்ல. சிலர் காழ்ப்புணர்ச்சியோடு தூற்றுகிறார்கள் .ஆனால் அவர்களும் பிழைக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்.







