புதுச்சேரியில் G.O.A.T. படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அவர்களுடன் விஜய் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். கட்சியை தொடங்கிய விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறிய விஜய், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று புதுச்சேரியில் உள்ள ஏ.எப்.டி பஞ்சாலையில் G.O.A.T. திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு நடிகர் விஜய்யைக் காண இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் புதுச்சேரி – கடலூர் சாலையில் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ நேற்று வைரலானது.
https://twitter.com/vp_offl/status/1754476228848111671
இந்நிலையில் இன்றும் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில், அவரைக் காண ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து நடிகர் விஜய் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது ஏறி, தன்னைக் காண வந்த ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அப்போது அவர் மீது பூமாலை, மலர்களை ரசிகர்கள் வீசி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.







