ஓசூர் அருகே காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஜவளகிரி வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பனைமரம் மேற்கு காப்புக்காட்டில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்து கிடந்தது. அதனையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்த, பின் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: கோவா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், ஜவளகிரி அருகே உள்ள திம்மன் தொட்டிகிராமத்தை சேர்ந்த விவசாயி மாரப்பன் (வயது50) என்பவர் நாட்டுத்துப்பாக்கியால் காட்டுயானையை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் பட்டியில் வளர்த்து வரும் மாடுகளை பெண் காட்டு யானை தாக்க வந்ததால், துப்பாக்கியால் சுட்டதை அவர் ஒப்புகொண்டுள்ளார். மேலும், சுட்டதும் காட்டுப்பகுதிக்குள் சென்ற சிறிது நேரத்தில் யானை இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மாரப்பனிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு, அவரை வனத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








