“குங்குமப்பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டும் சங்கமம்”

தமிழ்த்திரையுலகில், கண்ணதாசனும், வாலியும் இருபெரும் துருவங்களாக விளங்கி வந்த காலத்தில் அவ்வப்போது சில கவிஞர்களும் புகழ் பெற்று வந்ததை அறிந்திருப்போம். எம்ஜிஆர், சிவாஜிக்கென அவர்கள் எழுதிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன. குடியிருந்த கோயில்’…

தமிழ்த்திரையுலகில், கண்ணதாசனும், வாலியும் இருபெரும் துருவங்களாக விளங்கி வந்த காலத்தில் அவ்வப்போது சில கவிஞர்களும் புகழ் பெற்று வந்ததை அறிந்திருப்போம். எம்ஜிஆர், சிவாஜிக்கென அவர்கள் எழுதிய பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் அலட்டலின்றி காதலை வெளிப்படுத்தும் எம்.ஜி.ஆர்…, வெண்ணிற ஆடையில் நளினமாக ஆடும் ஜெயலலிதா என சொக்கவைக்கும் காட்சியில், மறைந்த இரு முதலமைச்சர்கள் நடித்த பாடலை எழுதியவர், இஸ்லாமிய பெண் கவிஞரான ரோஷனா பேகம்.

கோவையை சேர்ந்த ஷேக் முஸ்தபா என்பவரது மகள் ரோஷனா. பள்ளியில் படிக்கும்போதே, திரைப்பட பாடல்களை பாடும் திறன் பெற்றதோடு முறைப்படி இசையும் கற்றிருந்தார். திரைத்துறையினருடன் நெருங்கிய நட்பு பாராட்டிய ரோஷனாவின் தந்தை ஷேக் முஸ்தபாவும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் நண்பர்கள்.

தனது மகளின் பாடல்கள் பற்றி ஷேக் முஸ்தபா, மெல்லிசை மன்னரிடம் கூற, எம்ஜிஆர் நடித்து வந்த ‘குடியிருந்த கோயில்’ படத்தின் தயாரிப்பாளரான வேலுமணியிடம், எம்.எஸ்.வி. சிபாரிசு செய்தார். இதையடுத்து ரோஷனா சென்னை வந்து எம்.எஸ்.வி. முன்னிலையில் எழுதிய பாடல்தான் `குங்குமப் பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டின் சங்கமம்’ பாடல்…

“எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம், இன்னும் கண்ணில் ஏனிந்த அச்சம்” என பிற கவிஞர்களுக்கு போட்டியிடும் வகையில், ரோஷனா பாடல் எழுதியிருந்தார். ஆனால் அவர் எழுதிய பாடல் மாற்றப்பட்டு, வேறு ஒரு கவிஞர் எழுதிய பாடல் இடம்பெற்று படப்பிடிப்பு நடைபெற்றது.

இதையறிந்த தயாரிப்பாளர் வேலுமணி தலையிட்டதால், மீண்டும்`குங்குமப் பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டின் சங்கமம்’  பாடல் படமாக்கப்பட்டது. ‘குடியிருந்த கோயில்’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அன்றைய காதல் ஜோடிகளின் நெஞ்சில் `குங்குமப் பொட்டின் மங்கலம், நெஞ்சமிரண்டின் சங்கமம்’ பாடலும் ரிங்டோனாக நிலை கொண்டது.

ரசிகர்களின் மனதில் குடிகொண்டுவிட்டதாலோ என்னவோ, ஒற்றைப்பாடலுக்கு பின்னர் ரோஷனா எந்தப் பாடலும் எழுதாமல் போனது திரையுலகுக்கு இழப்புதான்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.