முகநூல் மூலம் பழக்கம் ஏற்படுத்தி பெங்களூரு மூதாட்டியின் படத்தை மார்பிங் செய்து பணமோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் ( 30), . இவருக்கு முகநூல் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கொடிப்பாடி புத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பழக்கமானார். நாளடைவில் அருள் பேச்சை நம்பி, தனது புகைப்படங்களை அந்த மூதாட்டி பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் மூதாட்டியிடம் தொலைபேசியில் பேசிய அருள், உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போகிறேன் என்று கூறி உள்ளார்.
இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அப்படி செய்ய வேண்டாம் என்று அருளிடம் கூறி உள்ளார். இதனை அருள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி மூதாட்டியிடம் இருந்து பணம் பறித்துள்ளார். கூகுள் பே மூலம் ரூ.12 ஆயிரம் பெற்ற அவர், கூடுதலாக ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், மார்பிங் படத்தை உங்கள்
கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரூ புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்மைக்கு களங்கம் விளைவித்தது, பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து கர்நாடக போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அவர்கள், இரணியல் போலீசார் உதவியுடன் நெய்யூர் சென்று என்ஜினீயர் அருளை கைது செய்த பின்னர் அவரை விசாரணைக்காக பெங்களூர் அழைத்துச் சென்றனர்.
-ரெ.வீரம்மாதேவி







