நாமக்கல் மாவட்ட இளம் பெண் கொலை விவகாரத்தில் வடகரையாத்தூர் அருகே 200 வாழை மரங்கள் மர்மநபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட நிலையில் நாமக்கல் எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே விகரைப்பாளையத்தைச் சேர்ந்த இளம் பெண் கடந்த மார்ச் 11-ம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அங்குள்ள வெல்ல ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நித்யா கொலை செய்யப்பட்ட பிறகு அந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்ல ஆலைகளுக்கு மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து வருகின்றனர். கடந்த மே 12 ம் தேதி வடகரையாத்தூரில் உள்ள கரும்பு ஆலைக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் நான்கு வட மாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் கெண்ட் நேற்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் வடகரையாத்தூர் அருகே புதுப்பாளையத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை புகுந்து ரூ.5 இலட்சம் மதிப்புள்ள 200 வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், ஏ.டி.எஸ்.பி ராஜூ உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலைகளுக்கு தீவைப்பு, வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு உள்ளிட்ட சம்பவங்களால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
-ரெ.வீரம்மாதேவி







