“இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும்” – தேர்தல் ஆணையர்!

தமிழகத்திலுள்ள இளைய தலைமுறையினர் தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்யுங்கள் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள்  குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் வருமானவரித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, ஜனநாயகத்தின் தாய். தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயகத் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டில் அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். 22 முதல் 29 வயது வரை உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 1 கோடி உள்ளது. 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

எஸ்.ஐ.ஆர் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடுக்கு பிறகு 216 பேர் மட்டுமே மீண்டும் மேல் முறையீடு செய்துள்ளனர். ஒரே கட்ட தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். சட்ட ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக உள்ளது. தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா தீவிரமாக தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். வேட்பாளர் ஆன்லைன் மூலம் வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ளது. தமிழகத்திலுள்ள இளைய தலைமுறையினர் தேர்தல் திருவிழாவில் கலந்து கொண்டு வாக்கு பதிவு செய்யுங்கள்.

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இருக்கும் என்பதால் வாக்களிக்க எளிதாக இருக்கும். 2 மணிநேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.