அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட முறையற்ற சிகிச்சையினால் குழந்தை பிறந்தவுடன் தாய் உயிரிழந்ததாகக் கைக்குழந்தையுடன் கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா காரத்தொழவு கிராமத்தில் வசிப்பவர்
பொன்னுச்சாமி. இவரது மனைவி சந்தியாவைப் பிரசவத்திற்காக உடுமலை அரசு
மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி சேர்த்துப் பிரசவம் பார்க்கப்பட்டது . மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சையின் காரணமாக தனது
மனைவிக்கு ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டதாகவும் , இதுகுறித்து உறவினர்கள்
அங்குள்ள செவிலியர்களிடம் கேட்டபோது கடுமையான சொற்களால் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தனது மனைவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும்படி வற்புறுத்தியதாகவும் , ஆனால் கோவை கொண்டு சென்ற நிலையில் சிகிச்சைப் பலனின்றி தனது மனைவி சந்தியா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்போது தனது கைக்குழந்தையுடன் தனியாகத்தான் இருப்பதாகவும் , தனது மனைவிக்கு
ஆரம்பக்கட்டத்திலேயே முறையான சிகிச்சை அளித்திருந்தால் உயிர் காப்பாற்றி இருக்க
முடியும் .மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கே தனது
மனைவி இறப்பிற்கு காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பொன்னுச்சாமி கை குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ரெ.வீரம்மாதேவி








