ஆந்திர மாநிலம் மார்கபுரம் மாவட்டம் ராயபுரம் அருகே இன்று காலை தனியார் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்து தீ பிடித்து எறிந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்ததால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 25க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்த முதற்கட்ட விசாரணையில் தனியார் பேருந்து, ஹைதராபாத்தில் இருந்து பமுரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அதேபோல் சிமாகுர்தியில் இருந்து வந்த லாரியும், அந்த பேருந்தும் திடீரென்று நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் 12 பேர் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.







