தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். தவெக சார்பில் மார்ச் 27ஆம் தேதி மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை பெரம்பூரில் இருந்து நாளை மறுநாள் முதல் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக பெரம்பூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பிரச்சாரம் நடைபெற வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஒரே நாளில் 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கோரி வழங்கப்பட்டுள்ள மனுவில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 3 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







