வங்கதேசம் : ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!

வங்காளதேசத்தில் பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தின் தென்மேற்கில் உள்ள ராஜ்பாரி அருகில் தவுலத்தியா படகு முனையம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பத்மா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றைக் கடக்க படகுப் போக்குவரத்தே முக்கியமானதாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் பேருந்துகள் மற்றும் சிறு வாகனங்களும் படகுகள் மூலமாகவே ஆற்றைக் கடந்து சென்று, சாலைப் பயணத்தை தொடர்கின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை தலைநகர் டாக்கா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 40 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த பேருந்து தவுலத்தியா முனையத்தில் மிதவைப் பாலத்தில் ஏறும்போது திடீரென பத்மா ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்து
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காணாமல் போன சிலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். படகுத்துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு சிறிய படகு அந்த மிதவைப்பாலத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.