அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சை மாவட்டம் திருவையாறில் நடந்த கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து பேசியவர், “அதிமுக ஒரு வலிமையான இயக்கம். தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அதிமுக அரசு துணை நின்றது. இங்கு மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தது.
அப்போது விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து நின்றனர். ஆனால் இந்த திட்டங்களை எனது தலைமையிலான அதிமுக அரசு தடுத்து நிறுத்தியதோடு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு உற்றதோழனாக இருந்து காப்பாற்றியது அதிமுக அரசு. விவசாய தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள், விலையில்லா ஆடு, மாடுகள் கொடுத்து உதவினோம்.
திமுக ஒரு குடும்ப கட்சி. ஆனால் அதிமுக தொண்டர்களுக்கான கட்சி. இங்கு கடைகோடி தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வர முடியும். எத்தனையோ சோதனைகளை எல்லாம் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சாதனைகளாக மாற்றினார்கள். கொரானா காலக்கட்டத்தில் நிதிநெருக்கடியிலும் விலைவாசி உயரவில்லை. அப்போது தமிழக அரசுக்கு வரிவருவாய் கிடையாது. இருப்பினும் சிறப்பான நிர்வாக திறமையால் விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.







