“விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” – பாலியல் புகார் விவகாரம் குறித்து அமைச்சர் கோவி செழியன் விளக்கம்!

கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் கோவி செழியன்…

"The culprits will soon be brought to justice" - Minister Kovi Chezhiyan explains the sexual harassment allegations!

கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனவும் அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று (டிச. 24) இரவு, இருவரும் கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து, மாணவரை தாக்கிவிட்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக வாசலில் மாணவர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடுநிலையான விசாரணை வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.