கராத்தே மாஸ்டரை கொலை செய்த தம்பதி! சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டரை,  கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த லோகநாதன்…

சென்னை அருகே மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டரை,  கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த
லோகநாதன் என்பவரை காணவில்லை என கடந்த 13ம் தேதி அவரது மகன் அஜய் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான கராத்தே மாஸ்டர் லோகநாதனை தேடி வந்தனர்.

தொடர்ந்து,  அவரது செல்போனில் கடைசியாக யார் பேசியது யார் என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  அதில் OMR சாலை நாவலூர் அடுத்த காரனை பகுதியை சேர்ந்த சுரேஷ் – கஸ்தூரி தம்பதியினர் கடைசியாக அவரிடம் பேசியது தெரியவந்தது.

பின்னர் இருவரையும் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் வரவழைத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  மாயமான லோகநாதன் செம்மஞ்சேரி பூங்காவில் தற்காப்பு கலையான கராத்தே,  யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.  தொடர்ந்து, சுரேஷ் – கஸ்தூரி தம்பதியினரின் 11 வயதான மூத்த மகனுக்கு லோகநாதன் கராத்தே பயிற்சி அளித்துள்ளார்.


மேலும் காரத்தே மாஸ்டர் லோகநாதனிடம் கஸ்தூரி யோகோ பயிற்சி மேற்கொண்டு
வந்துள்ளார்.  அப்பொழுது லோகநாதன்,  உடலில் பல இடங்களில் தொட்டதாக
கஸ்தூரி தனது கணவரிடன் கூறியுள்ளார்.  லோகநாதனின் செயல்கள் பிடிக்காத கஸ்தூரி கடந்த ஒரு மாத காலமாக யோகா பயிற்சிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

கஸ்தூரி யோகோ பயிற்சிக்கு செல்லாததால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட லோகநாதன்,  அவரை யோகா பயிற்சிக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.  இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான கஸ்தூரி தனது கணவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி, லோகநாதனை ஆளில்லாத பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்து, அங்குள்ள கிணற்றில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

உடனே போலீசார் அவர்கள் இருவரையும் மாயமான லோகநாதன் கொலை செய்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு கிணற்றில் சடலமாக மிதந்த லோகநாதன் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கணவன் – மனைவி இருவரையும் கானத்தூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டரை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.