டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார். மயிலாடுதுறையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க…

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

மயிலாடுதுறையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பகுதியின் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு அரசின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, ”டெல்டா மாவட்டத்தை கண் இமைகள் போல் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார். மத்திய அரசு டெல்டா மாவட்டத்தில் 3 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் உடனடியாக சட்டமன்ற கூட்டத்தில் கண்டிப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் முதலமைச்சர் ஸ்டாலின்” என மெய்யநாதன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், ”அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்தபோது அதிமுகவினர் வாய் திறக்கவில்லை, ஆனால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் போராட்ட களத்திற்கு வந்திருந்தார். பின் எந்த காரணத்தைக் கொண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அபாயகரமான திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்றும் விவசாயிகளிடம் கூறினார். இன்று ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டம் வராமல் தடுத்தும் உள்ளார்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.