திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “டெல்லியில் இன்று அரங்கேறும் காட்சிகளும், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையின் அளவும், நான் வாழ்ந்த நெருக்கடி நிலையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன. டெல்லியிலும் நாடு முழுவதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளம் போராட்டக்காரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தவெக அரசை, பாஜகவின் நீட்சியாகச் செயல்பட்டு, போராடும் மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அமைதியான முறையில் தங்களின் ஜனநாயக உரிமையான போராட்டத்தைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
கருத்து வேறுபாடு ஒரு குற்றமல்ல, ஜனநாயகத்தைப் பாதுகாக்க எழுபவர்களை அமைதியாக்குவதன் மூலம் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமா பேச்சுவார்த்தைக்கு உட்படாதது. அவரது ராஜினாமாவைத் தாண்டி, தேர்தல் ஆணையத்தின் நிறுவனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட அனைத்து சேதங்களும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




