பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ உள்ளிட்ட கட்டி முடிக்கப்பட்ட ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். தவெக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடி முதல் முறையாகத் தமிழகத்திற்கு வந்துள்ளார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் விஜய் விமான நிலையத்திற்கே சென்று மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுனர் அர்லேக்கர் ஆகியோரும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகிய இருவரும் விமான நிலையத்தில் இருந்து பூந்தமல்லி – வடபழனி மெட்ரோவைத் திறந்து வைப்பதற்காகப் போரூர் சென்றனர்.அங்கு பிரதமர் மோடி பூந்தமல்லி – வடபழனி மஞ்சள் நிற வழித்தடம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், ரூ.750 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட, 14.6 கி.மீ. நீளம் கொண்ட பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ மஞ்சள் நிற வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, இருவரும் போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோவில் பயணித்தனர். பிரதமர் மோடி டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்துப் பயணம் செய்தார். இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் அருகருகே அமர்ந்து, மெட்ரோ குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை ஐஐடி யில் புதிதாக கட்டப்பட்ட மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைப்பதற்காக பிரதமர் மோடி கிண்டியில் உள்ள ஐஐடி நோக்கி சென்றார். அப்போது வழியெங்கும் தொண்டர்கள் கூடியிருந்து பிரதமர் மோடிக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை ஐஐடி வந்தடைந்த பிரதமர் மோடி ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து ஐஐடி-ல் புதிதாக கட்டப்பட்டுள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் ஆராய்ச்சி மையம் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டெறிந்தார். தொடர்ந்து சென்னை ஐஐடி-யில் உள்ள K.V. மைதானத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொணட பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை இணைந்து தொடங்கி வைத்தனர். பின்னர் பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றினார்.
மேலும் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடந்த பொன்விழா நிகழ்வில் மாணவர்களிடம் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தனது பயணத்தை முடித்துக்கொணட பிரதமர் டெல்லி புறப்பட்டார்.




