ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் அமெரிக்கா! புதினுடன் ஒப்பந்தம் அறிவித்த டிரம்ப்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்கும் முயற்சியாக, ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “புதினுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் விளைவாக, அமெரிக்கா மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு முதற்கட்டமாக 3 லட்சம் டன்னுக்கும் அதிகமான டீசலை உடனடியாக விநியோகிக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் மேலும் 5 லட்சம் டன் டீசலும், அதற்குப் பின்னர் 10 லட்சம் டன் டீசலும் கொள்முதல் செய்யப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனைப் பொறுத்து, குறுகிய காலத்தில் கூடுதலாக 30 லட்சம் டன் டீசல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட அமெரிக்கப் பொதுமக்களுக்கு எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்படும் சிரமங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்காசியப் போர் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக அமெரிக்காவில் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கேலன் டீசலின் சராசரி விலை 3.68 டாலராக இருந்த நிலையில், தற்போது அது 6.28 டாலராக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் நவம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதும், எரிபொருள் விலை உயர்வதும் ஆளும் குடியரசுக் கட்சிக்குப் பெரும் அரசியல் சவாலாக உருவெடுத்துள்ளன.

இந்தச் சூழலில், ரஷ்யாவிலிருந்து டீசல் விநியோகத்தை எளிதாக்கும் வகையில், ரஷ்ய எரிபொருள் தொடர்பான சில பொருளாதாரத் தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த விலக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்முதல் செய்யும் டிரம்ப்பின் முடிவுக்கு உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

புதினுக்கு இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுவது அமைதியை ஏற்படுத்த உதவாது என ஸெலென்ஸ்கி விமர்சித்துள்ளார். மேலும், ரஷ்யாவுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது, அந்நாட்டின் போர் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக நிதியளிப்பதற்குச் சமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறிவந்த நிலையில், இன்று அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் உலகிற்கே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.