கேரளா மற்றும் தேனி மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அகத்திய மலை, யானைகள் காப்பக பகுதியான அப்பர் கோதை ஆறு என்ற பகுதியில் இன்று அதிகாலை 2 மணிக்கு விடப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் நேற்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்பட்ட அரிக்கொம்பனை, நெல்லை மாவட்டம் அகத்திய மலை யானைகள் காப்பக வனப்பகுதியில் விட வனத்துறையினர் கொண்டு சென்றனர். அந்த பகுதியில் யானையை விட எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு சோதனை சாவடியில் எஸ்டிபிஐ கட்சியினரும், பாபநாசம் முண்டந்துறை புலிகள் காப்பக சோதனைச் சாவடி முன்பு காணி இன மக்களும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானையை விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து துதிக்கை மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்ட அரிக்கொம்பன் யானையை அகத்தியர் மலை யானைகள் அப்பர் கோதையாறு பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் அங்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அரிக்கொம்பன் யானையை நெல்லை மாவட்டம் அப்பர் கோதைஆறு மேற்பகுதியில் இன்று அதிகாலை 2 மணிக்கு இறக்கி விட்டனர்.
தற்போது கோதையாறு அணைப்பகுதியில் யானை உலா வரும் பிரத்தியேக காட்சிகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ள வனத்துறை அதிகாரிகள் ஒவ்வொருவராக வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








