தமிழ்நாட்டில் கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சி.பி.எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கடந்த 2010ம் ஆண்டு அக்ரகாரத்தில் கந்துவட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடிய சிபிஎம் நிர்வாகி வேலுச்சாமி, கந்துவட்டி கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று அக்ரகாரத்திலுள்ள அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து சி.பி.எம் தேசிய தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆறுதல் கூறி நம்பிக்கை அளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராமகிருஷ்ணன், தமிழ்நாட்டில் கந்துவட்டி பிரச்சினையில் ஏராளமான படுகொலைகள், உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், தமிழ்நாடு அரசு கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள், நுண் நிதி என்ற பெயரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 10லட்சம் ரூபாய் வரை கடன் வசூல் செய்வது உள்ளிட்ட செயல்கள் நிகழ்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு மைக்ரோ நிதி நிறுவனங்கள் வசூல் செய்யும் வட்டி விகிதத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சி.பி.எம் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து கந்துவட்டி ஒழிப்பு சட்டத்தைத் தீவிரப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.








