நிஜ வரலாற்றை வெளிப்படையாக எடுத்துறைக்கிறது என்று இப்படத்தை பாராட்டினாலும், அதேசமயம் சிலர், இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கிறது என தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
1990ஆம் ஆண்டு காஷ்மீரில் இந்து மதத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தபப்ட்டது. லட்சக்கணக்கான இந்து பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் அகதிகலாக தஞ்சமடைந்தனர். இந்த உண்மைச்சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’.
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் மார்ச் 11ம் தேதி அன்று வெளியானது.
இப்படத்தில் இந்துக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுவதால், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்ற தோற்றத்தையும் உருவாக்கி இருக்கிறது.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியானது முதல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் விளைவாக, நேற்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நரேந்திர மோடி இப்படத்தை குறித்து பேசினார். இத்தனை வருடங்களாக மூடி மறைக்கப்பட்ட சரித்திர உண்மைகள் எல்லாம் தற்போது வெளியே தெறிந்துவிட்டதே என்ற அதிர்சியில் பலர் வலுவான எதிர்ப்பினை தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரிவினை நாளான ஆகஸ்ட் 14-ம் தேதியை குறிப்பிட்ட பிரதமர், இதுவரை அது குறித்த படம் எதுவும் எடுக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார். இப்போது வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு பெருமளவில் விவாதங்கள் எழுந்துள்ளது. உண்மைகளை மறுபரிசீலனை செய்வதற்குப் பதிலாக, அதை இழிவுபடுத்தும் பிரச்சாரம் மட்டுமே நடத்தப்படுகிறது என பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இப்படத்தை பாராட்டும் வகையில் அரியானா மாநில அரசு இப்படத்திற்கு முழுமையான வரிச்சலுகையை வழங்கியுள்ளது. மேலும், இது மிக முக்கியமான படம் எனவும், இதனை அரசு அதிகாரிகள் தவறாமல் பார்க்க வேண்டும் எனவும் மத்திய பிரதேச மாநிலத்தில் காவல்துறைக்கு இந்தப்படத்தைப் பார்க்க ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில், இஸ்லாமிய மதத்தினரை புண்படுத்தும் வகையில் பட காட்சிகள் அமைந்துள்ளதால், இந்தப் படத்தை தடை செய்யக் கோரி பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அந்த வழக்கினை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த படத்தில் மறைந்த இந்திய விமானப் படை அதிகாரி ரவி கண்ணா குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. 1990-ல் ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 விமானப் படை வீரர்களில், ஒருவரான ரவி கண்ணாவின் தியாகத்தை இப்படம் தவறாக சித்தரித்துள்ளதாகவும் உண்மைக்கு மாறாக காட்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார் அவரது மனைவி நிர்மல் கண்ணா. அக்காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் அதனை படக்குழு நீக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் நிர்மல் கண்ணா ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்ததையடுத்து மறைந்த விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் காட்சிகளை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு பக்கம் விமர்சகர்கள், நிஜ வரலாற்றை வெளிப்படையாக எடுத்துறைக்கிறது என்று இப்படத்தை பாராட்டினாலும், அதேசமயம் சிலர், இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கிறது என கடுமையாக விமர்சிக்கின்றனர்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.









