தஞ்சாவூர் தேர்த் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கவுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் அப்பர் மடத்துக்கான கோயில் உள்ளது. ஆண்டுதோறும் அப்பர் பிறந்த தினமான சதய நட்சத்திர தினத்தில் சித்திரைத் தேர்த் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஏப்ரல் 27ஆம் தேதி இரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது அப்பர் மடத்துக்குச் செல்வதற்காக சாலையின் வளைவில் தேரை இழுத்துள்ளனர். அப்போது, அருகே இருந்த பள்ளத்தில் தேரின் சக்கரம் இறங்கியுள்ளது. தேர் சாய்ந்த நிலையில் அதன் மேல் பகுதியில் இருந்த உயர் மின் அழுத்த மின் கம்பியில் தேரின் மேல் பகுதி உரசியுள்ளது. தேரில் மின்சாரம் பாய்ந்ததில் தேர் தீப்பிடித்து எரிந்தது. இதில், 11 பேர் வரை உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த தேர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நாளை மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தஞ்சாவூர் செல்கின்றனர்.
அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக ஏற்கெனவே அறிவித்த தலா ஒரு லட்ச ரூபாயை இருவரும் இணைந்து வழங்கவுள்ளனர்.









