நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்கவுள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
2014 மக்களவை தேர்தலில் பாஜக தொடங்கி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டுள்ளார். தேர்தல் வியூகம் வகுக்க பல்வேறு கட்சிகளும் தற்போது அவரை நாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்த பிரசாந்த் கிஷோர், அக்கட்சியின் துணைத் தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். நிதிஷ்குமாருக்கும் அவருக்கும் மோதல் வலுக்கவே கட்சியிலிருந்து விலகினார். அதன்பிறகு தேர்தல் வியூக வகுப்பு பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீபத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்ததாக, அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்தது.இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர். அதில், “எனது ஆலோசனைகளால் அமைந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 10 ஆண்டுகால ஆட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது மக்களிடம் தான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சியை பிரசாந்த் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.