மினி டைடல் பூங்கா – முதற்கட்ட பணிகள் தொடக்கம்

தகவல் தொழில் நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான முதற்கட்ட…

தகவல் தொழில் நுட்பத்தை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாட்டில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.

 

சென்னையில் உள்ள டைடல் பூங்காவில் மின்னணு, தகவல் தொழில்நுட்பம் போன்ற நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இதேபோன்று டைடல் நிறுவனம் தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் சுமார் 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் மினி டைடல் பூங்காக்களை அமைக்கவுள்ளதாக கடந்த 19-ம் தேதி சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

 

இவ்வாறு மினி டைடல் பூங்காக்களை அமைப்பதற்குத் தேவையான நிலங்களை அரசு வழங்கும் என்றும், இந்த டைடல் நிறுவனத்தால் அமைக்கப்படும் சிறப்பு நோக்கு நிறுவனத்தில் அரசின் பிரதிநிதியாக டிட்கோ நிறுவனம் ஒரு பங்குதாரராக செயல்படும் என்றும் இதில் முதற்கட்டமாக விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர் மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்களை டைடல் பார்க் நிறுவனம் அமைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 

அதனடிப்படையில், சேலம் மாவட்டம் கருப்பூர், வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் மற்றும் மேல்மொணவூர், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான முதல் கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திட்ட மேலாண்மை, பொறியியல் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான முன்மொழிவுகளை டைடல் பார்க் நிறுவனம் கோரியுள்ளது. 50,000 முதல் 1,00,000 சதுர அடி பரப்பளவில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.