சிவகளையில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை: தங்கம் தென்னரசு

சிவகளை மற்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை…

சிவகளை மற்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிவகளை, ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. சிவகளையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி 2ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில், தற்போது வரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் திரடு, ஆவாரங்காடு திரடு உள்பட 5 இடங்களில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதில் ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக செங்கலால் அமைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2,600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தமிழரின் தொன்மையை சிவகளை அகழ்வாராய்ச்சி எடுத்து கூறுகிறது. சிவகளை நாகரிகம் தமிழகத்தின் மிகத் தொன்மையான நாகரிகம். அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும் போது, தமிழகத்தில் சிவகளை முக்கிய அடையாளச் சின்னமாக திகழும். இங்கும், கீழடியிலும் அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அடுத்து கொற்கை பகுதியில் கடல்சார் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட ஆலோசனை நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.