மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1976 ஆம் ஆண்டு.. மிசா எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனத்தில் கூட 13 மாதம் தான் சிறையில் இருந்தார். ஆனால் 2002 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி , பொடா சட்டத்தில் கைதாகி 19 மாதங்கள் சிறையில் இருந்தார். பொடாவில் ஏன் கைதானார் .? அதைப் பார்ப்போம் ….
2002 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும், மற்றொரு பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து தீவிரவாத தடுப்பு சட்டமான பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவையில் அங்கம் வகித்து கொண்டிருந்தது மதிமுக. பொடா சட்டம் தாக்கல் செய்யும்போது, இருக்கின்ற சட்டங்களே போதும். பொடா வேண்டாம் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஆளும் கூட்டணியின் சார்பில் பேசிய சிவகாசி மக்களவை தொகுதி உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ, பொடா சட்டம் கசப்பு மருந்து போன்றது. சுவையை பார்க்க கூடாது. மருந்தின் தன்மையை தான் பார்க்க வேண்டும் என்று லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கும் பதிலளித்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக, அவரே பொடா சட்டத்தில் அடுத்த சில மாதங்களில், தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஜெயலலலிதா தலைமையிலான அதிமுக அரசால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 2002-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி, மதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ,கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகள் மீதான நிலைப்பாடு குறித்து பேசினார் . அப்போது அவர் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன்’ என்றார். கூட்டம் முடிந்ததும், அமெரிக்காவில் இருக்கும் தன் மகளை பார்க்கச் சென்றார் வைகோ. அந்தநேரத்தில், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக வைகோ, ஈரோடு கணேசமூர்த்தி, இளவரசன், அழகு சுந்தரம், சிவந்தியப்பன், பூமிநாதன், கணேசன், பி.எஸ்.மணியம், நாகராஜன் ஆகிய 9 பேர் மீது ‘பொடா’ சட்டத்தின் கீழ், தமிழ்நாடு க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
வைகோ அமெரிக்கா சென்றதால் குற்றம்சாட்டப்பட்ட இதர 8 பேரை உடனடியாக கைது செய்தனர். அமெரிக்காவில் இருந்து திரும்பிய வைகோவை, ஜூலை 11 ஆம் தேதி அதிகாலை, சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய வைகோவை போலீஸார் கைது செய்தனர். அவரை திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வைகோ உள்ளிட்ட 9 பேர் மீது, 2002 டிசம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதி 2 முறை வேலூர் சிறைக்கு சென்று வைகோவை சந்தித்தார். வைகோவுடன் கைதான மற்ற 8 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்து 2004-ஆம் ஆண்டு ஜாமீனில் விடுதலையாயினர். ஆனால், ஜாமீன் மனு தாக்கல் செய்ய மாட்டேன் என்பதில் வைகோ உறுதியாக இருந்தார்.
பின்னர், கருணாநிதி உள்ளிட்ட பலரின் வேண்டுகோளை ஏற்று, வைகோ ஜாமீன் மனு தாக்கல் செய்தார். சுமார் 19 மாத சிறை வாசத்துக்குப் பிறகு, 2004 பிப்ரவரி 7-ம் தேதி வைகோ விடுதலையானார். அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற 2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியை ஆதரித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 40 தொகுதிகளுக்கும் சென்று, தேர்தல் பரப்புரை செய்தார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் கூட்டம் மிக அதிகமாக வைகோவின் உரையை கேட்க கூடியது. அத்தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றது.
மிசா எனப்படும் நெருக்கடி கால கட்டத்தை விட, பொடா சிறையிலிருந்தபோது, இன்னல்கள் பலவற்றை அனுபவித்தார் வைகோ. சுமார் 50 ஆயிரம் கி.மீ. தூரம் பல நீதிமன்றங்களுக்கு, பல அரசியல் அவதூறு பேச்சு தொடர்பான வழக்குகளுக்காக போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்டார். இதற்கிடையில், பொடா மறுசீராய்வுக் குழு தீவிர பரிசீலனை செய்து, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி, வழக்கை வாபஸ் பெற, தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, 2004 ஆகஸ்டில் வழக்கை வாபஸ் பெறுவதாக, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வைகோ உள்ளிட்ட 9 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீரஇளவரசன், பி.எஸ்.மணியம் ஆகியோர் இறந்துவிட்டனர். சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு, வைகோவின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
உச்சநீதிமன்ற அறிவுரையின் பேரில், வைகோ உள்ளிட்ட 7 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், மதிவாணன் ஆகியோரை கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, 2014 அக்டோபர் 13-ம் தேதி, வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கை, ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் வைகோ மீதான சுமார் 12 ஆண்டு கால வழக்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
உலகத் தமிழர்களின் வாழ்வுரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வைகோ எனும் போராளி தலைவனின் குரல், இன்னும் பல ஆண்டுகள் ஓங்கி ஒலிக்கட்டும்…
செய்திப்பிரிவு, நியூஸ் 7 தமிழ்