அதுவொரு தாகம்… 28 வருட தாகம்… கோப்பையை வென்றே ஆக வேண்டும் என உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமை தாங்கும் அர்ஜெண்டினா ஒரு பக்கம்… சென்ற ஆண்டு கைப்பற்றியது போல் இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என பிரேஸில் அணி ஒரு பக்கம்…
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான, கோபா அமெரிக்க கோப்பைக்கான இறுதிப் போட்டி தொடங்கியது…. தொடங்கிய சிறிது நேரத்திலேயே, முதல் பாதியில் அர்ஜெண்டினாவிற்கு சாதகமாக ஒரு கோல் விழுந்தது. அர்ஜெண்டினாவின் ’டி மரியா’ அடித்த கோலைத் தாண்டி, பிரேஸில் ஒரு கோலும் அடித்து விடக்கூடாது என்று தடுக்கும் போக்கிலேயே, இரண்டாவது பாதி சென்றுக் கொண்டிருந்தது. 3, 2, 1 என கடைசி நொடிகள் முடிய, 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல்களோடு வெற்றியை உறுதி செய்த அர்ஜெண்டினா அணி வீரர்கள், மெஸ்ஸியை கட்டித் தழுவ…. அப்படியே ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார் மெஸ்ஸி.
ஆம், மெஸ்ஸி தனது முதல் சர்வதேச கோப்பை வெற்றியை பதிவு செய்த மகிழ்ச்சியில் மொத்த அணியும் அதனை மைதானத்திலேயே உணர்வுப்பூர்வமாக கொண்டாடித் தீர்த்தது. அது மட்டுமல்லாது, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா தொடரை வென்றுள்ள வரலாற்றையும் பதிவு செய்தது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி.
இதற்கு முன் 2015, 2016-ல் கோபா அமெரிக்கா கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று, நூலிழையில் கோப்பையை தவறவிட்டது அர்ஜெண்டினா. மூன்று முறை கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி வரையும், ஒருமுறை உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரையும் சென்று, தோல்வி அடைந்த மெஸ்ஸியின் கோப்பை தாகம்… என அனைத்தும் இந்த கோப்பையை வென்றதன் மூலம் நிறைவேறியுள்ளது.
தனது 16 ஆண்டு கால கால்பந்தாட்ட வாழ்க்கையில், தனிப்பட்ட சாதனைகளை விட தேசிய அணிக்காக கோப்பையை வெல்வதே மெஸ்ஸியின் கனவாக இருந்தது. அந்தவகையில், இந்த வெற்றியானது, அர்ஜெண்டினாவை மட்டுமல்லாது, உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் அனைவரையும் உணர்ச்சிப்பூர்வமான மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பார்சிலோனா கிளப் அணிக்காக பல்வேறு கோப்பைகளை வென்றுள்ள மெஸ்ஸி, தனது தாய்நாட்டிற்காக முதல் கோப்பையை வென்று, ”என்ன ஒரு அழகான வெற்றி இது, ஆச்சரியமாக இருக்கிறது, கடவுளுக்கு நன்றி….!!! நாங்களே உங்கள் தாய்நாட்டின் சாம்பியன்கள்” என கோபா அமெரிக்க கோப்பையை அணைத்தபடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை, கால்பந்தாட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.









